tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
சர்வதேச பெண்கள்
தின வாழ்த்துக்கள்..

 TNTCWU சார்பில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.

 உலகெங்கிலும் சமத்துவத்துக்காகவும், பெண்ணுரிமைக்காகவும், கண்ணியமான வாழ்க்கைக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் உலகப் பெண்கள் தின போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. 1910ல் கோபன்ஹேகனில் கூடிய இரண்டாவது சோஷலிச பெண்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையிலேயே உலகெங்கிலும் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படலாயிற்று. இதன் சோஷலிச பின்னணியைப் பெருமையுடன் நினைவு கூர்கிறோம். வாக்குரிமை, உலக சமாதானம், 8 மணி நேர வேலை என்ற முப்பெரும் கோரிக்கைகள் துவக்கத்தில் இத்தினத்தின் அடித்தளமாக விளங்கின.இன்றைய கால கட்டத்தில் ஒரு புறம் அரசின் கொள்கைகள் பெண் என்ற முறையில் மட்டுமல்ல, தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் என்ற பல மட்டங்களில் பெண்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாஜக அரசு கடைப்பிடிக்கும் நவீன தாராளமய கொள்கைகளின் விளைவாக அதிகரிக்கும் விலைவாசி, வேலையின்மை, பொது விநியோக முறை சிதைவு போன்றவை பெண்கள் மீது கூடுதல் சுமையாக விழுகின்றன. பாலின கண்ணோட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறைந்து வருகிறது. நிர்பயா நிதி செலவழிக்கப் படுவதில்லை. வரதட்சணை கொடுமைகளும் தொடர்கின்றன. மறுபுறம் பெண்கள், குழந்தைகள் மீதான அனைத்து வகை வன்முறைகளும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. பெண்கள் என்ன படிக்க வேண்டும், என்ன உடுக்க வேண்டும், யாருடன் நட்பாக இருக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனிப்பட்ட உரிமைகள் மீது இந்த அரசு தாக்குதல் தொடுக்கிறது. சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சாதிய, மதவாத தாக்குதல்களில் பெண்கள் குறி வைக்கப்படுகின்றனர். ஒரு புதிய வடிவமாக வலைத்தள குற்றங்கள் பெருகிவருகின்றன. தலித், பழங்குடியின பெண்களும், மாற்றுத் திறனாளி பெண்களும் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் சட்டமாக்கப்படவில்லை. சமூக மதிப்பீடுகளில், பண்பாட்டில் பாலின நிகர்நிலை பார்வை இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. ஊடக சித்தரிப்புகளும் பெண்களுக்கு நியாயம் வழங்குவதில்லை.இதே கால கட்டத்தில் இந்தியாவிலும், தமிழகத்திலும் நடந்த தொழிலாளி, விவசாயி, விவசாயத் தொழிலாளி, மாணவர், ஆசிரியர், அரசு ஊழியர், வங்கி, இன்சூரன்ஸ், தொலைபேசி, சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் போராட்டங்களில் பெண்கள் பெருமளவு பங்கேற்று, அரசின் ஒடுக்குமுறையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டதைக் காண முடிந்தது. அதே போல் வன்முறையற்ற கண்ணியமான வாழ்க்கைக்காக பெண்கள் இயக்கங்களின் பல போராட்டங்கள் நடந்துள்ளன. தனிப்பட்ட முறையிலும் வாழ்க்கையில் பெண்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு துறைகளில் தம் உழைப்பால் முத்திரை பதித்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் வானமே எல்லை என்ற அடிப்படையில், சம வாய்ப்புகளும், அவற்றைப் பயன்படுத்த உகந்த சூழலும் உருவாக்கப்படுவது பெண்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டினை சட்டமாக்கிட அனைவரும் சேர்ந்து குரல் எழுப்புவோம்..