tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
ரூ.1லட்சம் கோடி-பொதுத்துறையை சூறையாட மோடி அரசு சதி
ஒன்றுபட்ட போராட்டத்தை வலுப்படுத்துவோம்..

மத்திய அரசின் பொதுத்துறை பங்குகளை விற்கும் முயற்சியை ஒன்றுபட்டு முறியடிப்போம் என்றுபிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன் சூளுரைத்தார்.பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிஎஸ் என்எல் துணை டவர் கம்பெனி அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும்; 2017 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 15 விழுக்காடு ஊதிய உயர்வுடன் கூடிய மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண்டும்; 2 ஆவது ஊதிய   மாற்றத்தில் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்; ஆட்குறைப்பு திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 30ஆம் தேதியிலிருந்து சத்தியாகிரகம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தமிழ் மாநில தலைமைப் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் சத்தியாகிரக போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களான தொமுச, சிஐடியு, எச்.எம்.எஸ், ஏஐடியுசி, ஐஎன்டியுசி ஆகிய சங்கங்களின் தலைவர்கள், ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். இதில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளார் ஜி.சுகுமாறன் பேசியதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள நிதி நிலை அறிக்கையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு பொதுத்துறை பங்குகளை விற்கப்போவதாக அறிவித்துள்ளனர். கடந்தாண்டை விட 30 லட்சம் கோடி ரூபாய் அதிகம்.முன்பெல்லாம் நட்டத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனப் பங்குகளை மட்டுமே விற்றார்கள். இப்போது லாபத்தில் இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்கிறார்கள். சிறந்த லாபத்தில் இயங்கக் கூடிய பொதுத்துறையை அரசு நினைத்தால் நஷ்டத்திற்குக்
கொண்டு செல்ல முடியும் என்பதற்கு உதாரணம் தான் பி.எஸ்.என்.எல். நிறுவனம். அதனால்தான் அரசு டவர் அமைக்க துணை நிறுவனத்தை உருவாக்குகிறது. மேலும்மேலும் நஷ்டத்தை உருவாக்கக் கூடிய அனைத்து வேலைகளையும் அரசும், அதிகாரிகளே செய்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கடந்த முறை ஒப்பந்தம் போடும் போது இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை விட இப்போது ஒப்பந்தம் போடும் போது சுமார் 1 லட்சம் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. புதிதாக ஆட்களை நியமனம் செய்யவில்லை. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த முயற்சியும் மத்திய அரசிடம் இல்லை. நமது முன்னோர்கள் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் இந்த அரசு பறித்து வருகிறது. எனவே இந்தியா முழுவதும் ஒன்றுபட்ட போராட்டத்தை வலிமையாக நடத்த வேண்டிய தேவை பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உங்களது அனைத்துப் போராட்டங்களுக்கும் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் துணை நிற்கும். மத்தியஅரசின் பொதுத்துறை பங்குகளை விற்கும் முயற்சியை ஒன்றுபட்டு முறியடிப்போம்.

இதில் மு.சண்முகம் (தொ.மு.ச), சி.ஏ.ராஜாஸ்ரீதர் (எச்எம்எஸ்), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), சேவியர் (ஐஎன்டியுசி) ஆகியோரும் ஆதரவு தெரிவித்துப் பேசினர்..

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஜெ.சீனிவாசன், ஆர்.பட்டாபி (என்.எப்.டி.இ), வல்லரசு (எஸ்.என்.இ.ஏ), கலியமூர்த்தி (ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ), ஓம்பிரகாஷ் (எஸ்.சி.எஸ்.டி), சிறீதர் (டெபு),முருகையா (ஒப்பந்த தொழிலாளர் சங்கம்), நரசிம்மன் (ஓய்வூதியர் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும், ஏராளமான ஊழியர்களும் கலந்து கொண்டனர்.